நகரமயமாதலுக்கு மத்தியில் மாட்டுப் பண்ணை மரபு

நகரமயமாதலுக்கு மத்தியில் மாட்டுப் பண்ணை மரபு

நகரமயமாதலின் மத்தியில் பழைமையின் அடையாளமாக இப்பண்ணை நிற்கிறது.

இன்றைய சூழலுக்கேற்ப பண்ணையின் நடைமுறைகளை மாற்றியமைத்து 60க்கும் மேற்பட்ட பசுமாடுகளுடன் தொழில் நடத்தி வருகிறார் பண்ணை உரிமையாளர் திரு கோவிந்தசாமி சுப்பிரமணியம்.

பண்ணை உரிமையாளர் திரு கோவிந்தசாமி சுப்பிரமணியம்.
பண்ணை உரிமையாளர் திரு கோவிந்தசாமி சுப்பிரமணியம். - படம்: த. கவி

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை மாட்டுப் பண்ணைகள் சிங்கப்பூரின் வேளாண்மைத் துறையில் முக்கிய அங்கம் வகித்தன.

இன்று சிங்கப்பூரில் பால் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

சிங்கப்பூரின் கடைசி மாட்டுப் பண்ணையாக விளங்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணை, அந்த மாற்றங்களைத் தாங்கிக்கொண்டு சவால்மிக்க இக்காலத்திலும் திகழ்ந்து வருகிறது.

சிங்கப்பூரின் கடைசி மாட்டுப் பண்ணையாக விளங்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணை.
சிங்கப்பூரின் கடைசி மாட்டுப் பண்ணையாக விளங்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணை. - படம்: த. கவி

சவால்களுக்கு மத்தியில்...

சிங்கப்பூரின் முதல் பால் பண்ணையாளர்கள், இந்திய பால் பண்ணையாளர்களே. அவர்கள் தங்கள் கால்நடைகளை இறக்குமதி செய்ததன் மூலம் சிங்கப்பூருக்குப் பால் கறவைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

விக்னேஷ் மாட்டுப் பண்ணை முதலில் தொடங்கப்பட்டபோது இரண்டு மாடுகள் மட்டுமே இருந்தன. சுப்பிரமணியம் வளர்ந்த காலத்தில் சிங்கப்பூரில் மாட்டுச் சந்தைகள் பல இருக்க, அவர் மாடுகளை வாங்கி பண்ணையில் உற்பத்தியும் செய்து வந்தார்.

இரண்டு மாடுகளுடன் மட்டுமே தொடங்கப்பட்ட விக்னேஷ் மாட்டுப் பண்ணையில் தற்போது 60க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.
இரண்டு மாடுகளுடன் மட்டுமே தொடங்கப்பட்ட விக்னேஷ் மாட்டுப் பண்ணையில் தற்போது 60க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. - படம்: த. கவி

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த 74 வயது சுப்பிரமணியம், தமது இளமைப் பருவத்தில் கால்நடைகளுடன் செலவிட்ட நேரத்தை உணர்ச்சி பொங்க நினைவுகூர்ந்தார்.

பள்ளிப் பருவத்தில் பொத்தோங் பாசிரில் முன்பிருந்த மாட்டுப் பண்ணைக்குச் சென்று அங்கிருந்த ஹிந்தி பணியாளர்களுடன் பால் கறத்தல், கால்நடைகளுடன் விளையாடுதல் போன்றவற்றில் ஈடுபட்ட அதே நேரத்தில் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாகக் கூறினார் சுப்பிரமணியம்.

“என் அப்பா யாதவர் குலத்தைச் சேர்ந்தவர். என் உடன்பிறப்புகள் மொத்தம் 11 பேர். நாங்கள் ஆறு ஆண்கள், ஆறு பெண்கள். 12 பிள்ளைகளில் நான் ஒருவர் மட்டும்தான் இத்தொழிலைச் செய்து வருகிறேன். தமிழகத்தில் என் அப்பா இத்தொழிலை செய்து வந்தார்,” என்று சுப்பிரமணியம் கூறினார்.

பழங்காலத்து சிங்கப்பூரில் தமிழர்களுக்கு அப்பாற்பட்டு இதர இனத்தவர்களும் பண்ணைத் தொழிலைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்ட சுப்பிரமணியம், அப்போது வீடு வீடாகச் சென்று பால் விற்கும் காட்சிகள் இப்போதில்லை என்றும் இப்போது தொழில்நுட்பம்தான் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கிறது என்றும் சொன்னார்.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுப்பிரமணியம் ஆர்வத்தின் அடிப்படையில் பண்ணைத் தொழிலில் இறங்க முடிவெடுத்தார். கடந்த 30 ஆண்டுகளாக லிம் சூ காங்கில் இப்பண்ணையை நடத்தி வரும் அவர், முதன்முதலில் தொழில் ஆரம்பித்தபோது அவருக்கு 20 வயதுதான்.

லிம் சூ காங் பகுதிக்கு வரும் முன்னர் அவர் மற்ற இரு இடங்களில் பண்ணை நடத்தி வந்தார்.

கால்நடைகளுடன் தாம் கொண்டுள்ள பிணைப்பைப் பற்றிக் கூறிய அவர், பண்ணையில் இருக்கும் தமது மாடுகளும் ஆடுகளும்தான் தமக்கு எல்லாம் என்றார்.

“நான் நலமாக இல்லையென்றால் என் மாட்டுக்கு தெரியும். இவை மாடுகளாக இருந்தாலும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் கொண்டவை. அதனால் எனக்கு மாடுகளின் மேல் அதிக அன்பு உள்ளது,” எனக் கண்கலங்கியவாறு கூறினார் சுப்பிரமணியம்.

கால்நடைகளைப் பராமரித்தல்

அனுதினமும் அதிகாலை ஐந்து மணி வாக்கில் இயந்திரங்களை வைத்து பால் கறக்கத் தொடங்கி, கால்நடைகளைக் குளிப்பாட்டி, காலை 11 மணியளவில் அவற்றுக்குத் தீனி அளிக்கப்படும்.

மாடுகளைக் குளிப்பாட்டும் பண்ணை ஊழியர்.
மாடுகளைக் குளிப்பாட்டும் பண்ணை ஊழியர். - படம்: த. கவி
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீனி.
மாடுகளுக்கு அளிக்கப்படும் தீனி. - படம்: த. கவி

பிற்பகல் மூன்று மணி போல மாடுகளுக்குத் தானியங்கள் அளிக்கப்பட்ட பின்னர் இரவு ஏழு மணியளவில் இரவு உணவு அளிக்கப்படும்.

மாடுகளுக்கு இரவு ஏழு மணியளவில் இரவு உணவு அளிக்கப்படுவது வழக்கம்.
மாடுகளுக்கு இரவு ஏழு மணியளவில் இரவு உணவு அளிக்கப்படுவது வழக்கம்.  - படம்: த. கவி

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஊழியர்களின் உதவியோடு கால்நடைகள் பராமரிக்கப்படுகின்றன. மாடுகளுக்கான தீனியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஊழியர்களின் உதவியோடு கால்நடைகள் பராமரிக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஊழியர்களின் உதவியோடு கால்நடைகள் பராமரிக்கப்படுகின்றன. - படம்: த. கவி
மாடுகளுக்கான தீனியை ஊழியர் அள்ளுகிறார்.
மாடுகளுக்கான தீனியை ஊழியர் அள்ளுகிறார். - படம்: த. கவி

தண்ணீர், மின்சாரம், பாலைக் குளிர வைப்பதற்கான இயந்திரச் செலவு என மாதந்தோறும் அத்தியாவசிய செலவுகள் 20,000 வெள்ளியிலிருந்து 25,000 வெள்ளிவரை ஆகும் என்று திரு சுப்பிரமணியம் கூறினார்.

சமூகத்துடன் இணைப்பு

சிங்கப்பூரில் கோவில் நிகழ்ச்சிகளுக்குக் கால்நடைகளை அழைத்துச் செல்லுதல், வீடு கிரகப்பிரவேசத்திற்குக் கால்நடைகளை அழைத்துச் செல்லுதல் என இந்திய சமூகத்துடன் பின்னிப் பிணைந்தவாறு செயல்பட்டு வருகிறது இப்பண்ணை.

கோவில் வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் பாலிலிருந்து இந்திய குடும்பங்கள் பண்ணைக்கு வந்து தங்களது வழிபாட்டுக்குத் தேவையான தூயப் பாலை வாங்குவது வரை விக்னேஷ் மாட்டுப் பண்ணை முக்கியத் தூணாக நிற்கிறது.

மேலும், ஆண்டுதோறும் ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்யும் பொங்கல் நிகழ்ச்சிகளுக்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணையிலிருந்துதான் கால்நடைகள் வரவழைக்கப்படுகின்றன.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்யும் பொங்கல் நிகழ்ச்சிகளுக்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணையிலிருந்து கால்நடைகள் வரவழைக்கப்படுகின்றன.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் ஏற்பாடு செய்யும் பொங்கல் நிகழ்ச்சிகளுக்கும் விக்னேஷ் மாட்டுப் பண்ணையிலிருந்து கால்நடைகள் வரவழைக்கப்படுகின்றன. - படம்: த. கவி

தந்தை வழியில் தனயன்

சிங்கப்பூரில் இளையர்கள் பெரும்பாலும் செய்யாத ஒன்றை, சுப்பிரமணியத்தின் மகன் விக்னேஷ் செய்து வருகிறார்.

தந்தைக்குப் பிறகு இத்தொழிலை விடாமல் அதைப் பாதுகாக்க விழைகிறார் விக்னேஷ்.

பால் கறப்பதிலிருந்து கால்நடைகளைப் பராமரிப்பது வரை அனைத்தையுமே தம் தந்தையிடமிருந்து கற்றுத்தேர்ந்துள்ளார் பட்டயப் படிப்பு மேற்கொண்டுள்ள விக்னேஷ்.

தம் தந்தையிடமிருந்து தொழிலைப் பற்றிக் கற்றுக்கொண்டார் விக்னேஷ்.
தம் தந்தையிடமிருந்து தொழிலைப் பற்றிக் கற்றுக்கொண்டார் விக்னேஷ். - படம்: த. கவி

“என் தொழில் அழியாது என்ற நம்பிக்கை இருக்கிறது. என் மகனை நினைத்தால் பெருமையாக உள்ளது. அவனை நான் சிறுவயதிலிருந்து பண்ணைக்கு அழைத்து வருகிறேன்,” என நெகிழ்ந்தவாறு கூறினார் சுப்பிரமணியம்.

சாணத்தை அள்ளச் சிலர் முகம் சுளிக்கும் வேளையில் இளம் பருவத்திலிருந்தே மாடுகளுடன் ஒட்டி உறவாடிய விக்னேஷ், இந்தத் தொழிலில் ஈடுபடுவது தமக்குக் கூச்சத்தை அளிக்கவில்லை என்றார்.

“என் வயதில் இருக்கும் பலருக்கு இது வியப்பாக உள்ளது. இத்தொழிலை அவர்கள் அருவருப்புடன் பார்ப்பார்கள். ஆனால், எனக்கு என் தந்தை இத்தொழிலை ஊட்டி வளர்த்ததால் நான் பெருமையாகப் பார்க்கிறேன்,” என்று விக்னேஷ் கூறினார்.

தம் தந்தை இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்த தொழிலை, அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல விரும்புகிறார் விக்னேஷ்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பண்ணையில் இப்போது காய்ச்சிய பாலும் தயிரும் விற்கப்படுவதாகக் கூறினார் அவர்.

சவால்கள் நிறைந்த இத்தொழிலைப் பற்றி விளக்கிய விக்னேஷ், மாடுகளை வாகனங்களில் ஏற்றுதல், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டார்.

“மாடுகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது எனக்கு என் உறவினரை அழைத்துச் செல்வது போன்ற ஓர் உணர்வு. கால்நடைகள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்போல. அவர்களின்றி நாங்கள் இல்லை,” என்று புன்முறுவலுடன் சொன்னார் விக்னேஷ்.

“நண்பர்கள் சிலர் என்னைக் கேலி செய்துள்ளனர். இத்தொழிலில் ஈடுபடுவதால் நான் பல தியாகங்களையும் செய்துள்ளேன். நண்பர்களுடன் வெளியில் செல்ல முடியாது, வெளிநாடு செல்ல முடியாது. ஒரு தாய்க்கு மகன் கடமைப்படுவது போல நான் என் மாடுகளைப் பேணிக்காக்கிறேன்,” என்று விக்னேஷ் கூறினார்.

தாம் செய்யும் தொழிலை மதித்து, தமது பெற்றோர் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்துக்கொள்வது போல எதிர்காலத்தில் தமது வாழ்க்கைத்துணையும் தமக்கு அமைய வேண்டுமென்று விரும்புகிறார் விக்னேஷ்.

எதிர்காலம் குறித்த சிந்தனை

கால்நடைகள் தமிழர் கலாசாரத்தில் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறிய சுப்பிரமணியம், எத்தகைய மாற்றங்கள் எழுந்தாலும் இத்தொழில் விட்டுப்போய்விடக்கூடாது என்பதில் ஆணித்தரமாக உள்ளார்.

பெரும்பாலான குடும்பத் தொழில்கள் தொடராமல் இருப்பதற்கு, அடுத்த தலைமுறையினர் அதை முன்னெடுத்துச் செல்ல விரும்பாததே காரணம் எனத் தெரிவித்த சுப்பிரமணியம், பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டுமென்றார்.

அடுத்த நிலைக்குப் பண்ணையைக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ள விக்னேஷ், பண்ணையைச் சுற்றுலாத் தளமாக்கும் முயற்சிகளில் ஈடுபடவும் நெய் போன்ற இதர பொருள்களை விற்கவும் விரும்புகிறார்.

“இந்திய கலாசாரத்தில் முக்கியப் பங்காற்றும் மாடுகளை நாம் மறக்கக்கூடாது. சிங்கப்பூருக்கு மாடுகள் தேவை. சிங்கப்பூரில் மாடு இல்லாமல் எப்படி மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது?” என வினவினார் விக்னேஷ்.

அடுத்த ஆண்டு பண்ணை வேறு பகுதிக்கு இடம் மாறப் போவதாகக் கூறிய விக்னேஷ், அதை மாற்றியமைக்கும் முயற்சிகளில் இறங்கவுள்ளார்.

Back to blog